இந்தியாவில் தபால் துறை என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு பரிசுப்பொருட்கள் விழுந்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களை கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தபால் துறை பெயரிலும் மோசடி நடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய தபால் துறை சில சர்வே மற்றும் குயிஸ் போட்டிகளை நடத்தி வருவதாகவும், அதன்மூலம் மானியத்தொகை வழங்கப்படுவதாகவும் இணையதளத்தில் வைரலாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து தபால் துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதன் காரணமாக தபால்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்திய தபால் துறை எந்த ஒரு சர்வே மற்றும் குயிஸ் போட்டிகளை நடத்துவது இல்லை எனவும், அதன் மூலமாக மானியம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை எனவும் அறிவித்துள்ளது. எனவே ஆன்லைனில் பரப்பப்படும் பொய்யான வதந்திகளை நம்பி மக்கள் யாரும் பணத்தை இழக்க வேண்டாம். அதன்பிறகு அடையாளம் தெரியாத ஒருவரிடம் உங்களுடைய ஆதார் அட்டை எண், சேமிப்பு வங்கி கணக்கு எண், தொலைபேசி எண், ஓடிபி நம்பர் போன்ற தனிநபர் விவரங்களை பகிர வேண்டாம். மேலும் ஆன்லைன் மோசடிகளை நம்பி பணத்தை இழந்த நபர்களுக்கு இந்திய தபால் துறை பொறுப்பாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.