மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது பல நாடுகளில் பரவியது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஓமைக்ரானின் பிஎப்.7, பிஏ 5.2.1.7 வைரஸ் தான் என கூறப்படுகிறது. இது அதி வேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது சீனா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
அதேபோல் நமது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து ஒடிசாவிலும் இந்த வைரஸ் ஓருவருக்கு பாதித்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் பொது மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருமணம், அரசியல் நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் தேவை இல்லாமல் கூட வேண்டாம். மேலும் சர்வதேச நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதோடு கொரோனா முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளது.