பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது.
அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சில நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதனால் சில நாடுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நான்கு பேருடன் தொடர்பில் இருந்த விமான பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது.