இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், “உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம்” என்ற மையம் இயங்கி வருகிறது.
அந்த மையத்தின் தலைவரும் அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் கிறிஸ்டோபர் முராரே அளித்துள்ள பேட்டியில், இந்தியாவை பொறுத்தவரை அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சம் பெறும் என்று நாங்கள் கருதுகிறோம். கொரோனா உச்சமடையும் போது தினமும் 5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம். அதே சமயம் கடந்த அலையான டெல்டா பாதிப்புடன் ஒப்பிடும்போது இப்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.