ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இந்த வகை மீன்கள் உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.
ஆப்ரிக்க கெளுத்தி தான் வாழ்வதற்காகப் பிற மீன்களைக் கொன்று திண்ணும் தன்மை கொண்டவை. பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் முறையையும் இவை பின்பற்றுகின்றன.பொதுவாக நமது நீர்நிலைகளில் வாழும் மீன்கள் தான் வாழப் பிற மீன்களை வேட்டையாடுவது இல்லை. ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாகக் கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாள்கள் உயிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக் குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.
இதுபோன்ற பல அசாதாரண விஷயங்கள் இதற்கு இருப்பதால் இயற்கையாகவே பிற வகை மீன்களை கொன்றொழித்து இவை மட்டும் அதிகம் வளர்ந்து நமது நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும். இந்த வகை மீன்கள் தற்போது கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியார் அணையில் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் பெரிய ஆபத்து என்னவென்றால், நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து, இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்துவிடும். அதோடு இந்த வகை மீன்கள் தண்ணீரில் இருக்கும் உலோகங்களை தன்னகத்தே சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
இதன்காரணமாக ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன. இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் உடல் உபாதைகள் உருவாகும் ஆபத்து அதிகமாகிறது. இவ்வளவு கொடிய இந்த ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களை, சீக்கிரம் வளர்வது மற்றும் நல்ல விலைக்கு விற்கிறது என்ற காரணத்திற்காக மக்கள் இதனைக் குட்டைகளில் வளர்த்து வருகிறார்கள். இவ்வளவு ஆபத்து உள்ள ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களை வாங்குவதும், விற்பதும் நமது ஆரோக்கியத்திற்கே உலை வைக்கும்.