தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்,மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டிலிருந்து செல்லும்போது முக கவசத்தை மறந்து செல்பவர்கள் வெளியில் முகக்கவசம் வாங்குகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முகக்கவசம் வாங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் ஷேர் ஆட்டோ ஒன்றில் முகத்தில் மயக்க மருந்து தடவி கொடுத்து ஒரு பெண்ணின் பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்துகளில் தெரியாத நபர்கள் முகக்கவசம் கொடுத்தால் வாங்க வேண்டாம் என கூறியுள்ளது.