உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டடத்திலுள்ள ஆர்.எஸ். புரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர் , காந்திபுரம், ரயில்வே நிலையங்கள், சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை போன்ற முக்கிய இடங்களில் உள்ள உணவு விற்பனையகங்கள், கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் போன்ற பல கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதுவரையில் 353 கடைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவைகளை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 86,830 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் 61,995 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு 79 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருட்கள் மற்றும் புகையிலை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடைகளுக்கு 77,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் காலாவதியான பொருட்கள் குறித்து தொடர்ந்து சோதனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.