சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கட்டிடங்களில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு செய்யும் கட்டட உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.சென்னையை அழகுபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.