சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி முருகேசனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து அதில் இருக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முருகேசன் லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 978 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது முருகேசனின் பணம் தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது உடனடியாக பாதிக்கப்பட்ட நபருக்கு அந்த பணம் திரும்ப கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வங்கியின் சட்ட பிரிவுக்கு போலீசார் தகவல் தெரிவித்து பணத்தை மீட்டனர். மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.