குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்தத் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 24 நாடுகளில் இந்த தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 300 பேர் குரங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வைரத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்திருக்கின்றது. அத்துடன் அச்சுறுத்தல் நிலையை குறைந்த அளவில் என்ற நிலையிலிருந்து மிதமான அளவு என்ற மட்டத்திற்கு உயர்த்தி எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றது. முதன்முறையாக பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் வைரஸ் தொற்றுகள் பதிவாகி இருப்பதும், எந்த தொடர்பும் இல்லாமல் ஆப்பிரிக்காவில் வைரஸ் பரவுவதுமே இந்த நிலை உயர்தலுக்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்திருக்கிறது.
மேலும் இந்த வைரஸ் வனவிலங்குகளுக்குள் பரவிவிடும் எனவும், அது அளிக்கப்படாது எனவும் கவலை தெரிவித்து உள்ள உலக சுகாதார அமைப்பு, இது வைரஸ் உருமாற்றம் அபாயத்தையும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புக் குறைபாடுள்ளவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்தில் இருக்கும் மிகவும் பாதிக்கப் படக்கூடிய மக்களுக்கு இந்த வைரஸ் பரவினால் அது பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குரங்கு காய்ச்சல் தொற்றின் இந்த எழுச்சியை எச்சரித்துள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த வைரஸ் பல வாரங்கள் அல்லது அதற்கு மேலாக அடையாளம் காணப்படாமல் பரவி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று இன்னும் முடிவுபெறாத நிலையில் குரங்கு காய்ச்சலின் வீரியம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.