சென்னை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்கள், பொதுத்துறை கட்டிடங்கள், பொதுத்துறை இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள், கொடி, தோரணங்கள் அமைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மீறி அமைக்கப்பட்டால் அவை உடனடியாக அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.