செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,150 கன அடியாக அதிகரித்து இருக்கின்ற நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் 95 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 90 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 91 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் முழு கொள்ளளவையும் 24 ஏரிகள் 75% கொள்ளளவையும் எட்டியுள்ளது.
இதனை அடுத்து செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,150 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனடியில் செவ்வாய்க்கிழமை காலை 2,675 மில்லியன் கனஅடியாக இருந்தது ஒரே நாளில் 90 மில்லியன் அதிகரித்து தற்போது 2,765 மில்லியன் ஆக இருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் சுற்றுவட்டத்தில் 9.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்ற காரணத்தினால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றில் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் 100 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.