பெண் டாக்டரிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவன்யூ பகுதியில் டாக்டர் ஆனால் ஷோபனா(53) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் ஷோபனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் மின்சார துறையில் இருந்து பேசுகிறேன். நீங்கள் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே நான் அனுப்பும் லிங்கில் பணத்தை செலுத்துங்கள் என கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ஷோபனா அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்கை தொட்டுள்ளார். சிறிது நேரத்தில் ஷோபனாவின் வங்கி கணக்கில் இருந்து 95 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷோபனா பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்