ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செல்வி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி 799 ரூபாய்க்கு சேலை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அது கடந்த ஜூன் 25ஆம் தேதி கொரியர் மூலமாக வந்துள்ளது. அந்த சேலையில் கிழிசல் இருந்ததால் உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் ரகசிய எண்ணையும் கேட்டுள்ளனர். அதனை நம்பி செல்வி அந்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதை எடுத்து வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப அனுப்பப்படும் என்று கூறிவிட்டு அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர். ஆனால் அதற்கு பதில் அவரது இரு வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1,25,000 எடுக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முகம் தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கு உள்ளிட்ட தனிநபர் விவரங்களை பகிரக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.