கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா, ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக நான்காவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இது சுகாதாரத் துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஓமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த தொற்று ஓமைக்ரானை விட அதிக வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தற்போது பிரிட்டன் நாட்டில் எக்ஸ்.இ அசுர வேகத்தில் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்.இ தொற்று இந்தியாவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இது இந்தியாவிற்கு பரவும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் எக்ஸ்.இ வகை கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.