மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஹீமோபிலியா நோயால் 1,800 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர், இந்த நோயாளிகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஹீமோபிலியா பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 87.97 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்தில் நோய் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதன் காரணமாக 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவுவது போன்ற விதிமுறைகள் இன்னும் ஒரு சில மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என எடுத்துக்கொள்ள முடியாது.
முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் இல்லை என்பது தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை. அதேநேரம் முக கவசம் அணிவது தொடர்பாக விலக்கு அளிக்கப்படவில்லை. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 812 இடங்களை நிரப்ப வேண்டும். அதில் 24 இடங்கள் மத்திய அரசு நிரப்ப வேண்டும் அதற்கு கால அவகாசம் முடிந்து விட்டதால் நின்றுவிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசிற்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார் என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.