தமிழகத்தில் அலைபேசி வாயிலாக பரிசுத்தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உங்களின் அலைபேசிக்கு, கூகுள் குரோமில் வரும் கூகுள் பே போன்ற ஆப்களில் பரிசு விழுந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் தகவல் கேட்டு வங்கியிலிருந்து அனுப்புவதாக கூறி குறுந்தகவல் அனுப்பப்படும். அதன் மூலம் அதிக அளவில் பண மோசடி செய்யப்படுவதாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி விவரங்களை கேட்டு, அனைத்து விவரங்களையும் திரட்டிய பிறகு அலைபேசிக்கு வங்கி போன்று போலி லோகோ வைத்து குறுந்தகவல் வரும். அந்த லின்கை கிளிக் செய்தால் அலைபேசி, வங்கிக் கணக்கு மற்றும் ஓடிபி எண் கேட்கும். அதை நீங்கள் வழங்கிய அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் திருடப்படும்.இதனைக் கிளிக் செய்தால் உங்களுக்கு 2000 ரூபாய் பரிசு விழும் என்று சில லிங்க் உங்களுக்கு குறுந்தகவல் மூலமாக வரும்.
அதனை நம்பி உங்கள் தகவல்களை நீங்கள் பதிவிட்டால் உடனே அனைத்து பணமும் பறிபோய்விடும். இதுபோன்று கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 20 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே மக்கள் இது போன்றவற்றை நம்பி ஏமாறாமல் ஆன்லைன் மோசடி குறித்து 155 260 என்ற எண், cybercrime.gov.inஎன்ற வெப்சைட்டில் புகார் தெரிவிக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.