தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள கட்மூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்அப் மூலம் மொபைல் செயலிக்கான லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது அந்த செயலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அதில் தெரிவித்திருந்தது. இதனை நம்பிய சிலர் அதில் ரூ.500 வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்த பணம் அடுத்த நாள் இரட்டிப்பாக்கி வந்துள்ளது.
இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. உடனே அந்த செயலியில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் இந்த முறை முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்கள் ஏமாற்றம் அடைந்து விட்டோம் என்று உணர்ந்தனர். இதையடுத்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.