லோன் ஆப் செயலிகள் வாயிலாக அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்து, பிறகு தொல்லை செய்யும் மோசடி கும்பலை கடந்த வருடம் ஜனவரி மாதம் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட செயலிகளை கண்டறிந்து அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையில் லோன் செயலிகள் மறுபடியும் பிளே ஸ்டோர், வெப்சைட்டுகள் ஆகியவைகளில் அதிகரித்து வருவதாக தெரிகிறது.
லோன் ஆப் செயலிகள் மூலமாக கடன் வாங்கும்போது, தனிப்பட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களில் பணத்தை திருப்பி செலுத்தாத பட்சத்தில் மிரட்டல் விடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் நண்பர்கள், உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுகின்றன. ஆகவே பொதுமக்கள் யாரும் இது போன்ற லோன் செயலிகளில் கடன் பெற்றுக்கொள்ள வேண்டாமென சென்னை பெருநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டு உள்ளார்.