சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் செல்போனில் வந்த ஆப்மூலம் 11 மின்கட்டணம் கட்டி முடிந்தவுடன் பெண் மருத்துவரிடம் 95 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மகேந்திரன் மற்றும் ஷோபனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சோபனா தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ம் தேதி அன்று வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது மதியம் 12 மணியளவில் அவரது செல்போனில் நம்பர் ஒன்று வந்துள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்வாரியத்தில் இருந்து தான் பேசுவதாக தெரிவித்து மின் கட்டணத்தில் 11 பாக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பணத்தை நாங்கள் தந்த ஆப் மூலமாக உடனே கட்டுங்கள் தாமதம் செய்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய சோபனா அந்த ஆப் மூலமாக தன்னுடைய செல்போனிலிருந்து 11 ரூபாய் மின் கட்டணம் கட்டியுள்ளார்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வங்கி கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவர் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் மின் கட்டணம் தொடர்பாக எந்த தகவலையும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபனா உடனே போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலி செய்தி மூலம் 95 ஆயிரம் ரூபாயை பெண் மருத்துவர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக புதுவித மோசடிகள் நடந்து வரும் நிலையில் மக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் இது போன்ற போலி செய்திகளை நம்பி பணத்தை இழந்து வரும் சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது.