பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை பீதியடைய செய்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் இன்னும் அதன் பாதிப்பு இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் 8 நாட்களில் 2 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த 15 மாத ஆண் குழந்தைக்கு, கடந்த மாதம் 22-ந் தேதி போலியோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டை சேர்ந்த மேலும் ஒரு குழந்தைக்கு நேற்று போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 வயது பெண் குழந்தை போலியோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்தில், தேசிய சுகாதார நிறுவனத்தின் தேசிய போலியோ ஆய்வகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வாய்வழி மற்றும் ஊசி மூலம் போலியோ சொட்டு மருந்துகளை வழங்க குழு ஒன்று ஏற்கனவே அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் நாட்டில் கிட்டத்தட்டட 15 மாதங்களாக போலியோ தொற்று இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தொற்று மெல்ல தலைகாட்டி இருப்பது போலியோ தடுப்பு அதிகாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. ரம்ஜான் விடுமுறைக்காக, மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்யும்போது, வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.