39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பீரங்கிகுள தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம், தான் பெங்களூருவில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 800 ரூபாய் கிடைக்கும் வகையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக தொழில் செய்ய அடையாள அட்டை வழங்கப்படும் என பார்த்திபன் கூறியுள்ளார். இதனை நம்பி உதயகுமார் பல்வேறு தவணைகளாக பார்த்திபன் கேட்ட 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து கூடுதல் லாபம் தருவதாக மீண்டும் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் கூறியதை நம்பி உதயகுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் பார்த்திபன் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதே போல் பார்த்திபன் 17 பேரிடம் 39 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உதயகுமார் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.