தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. அணைக்கு வினாடிக்கு 711 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு தண்ணீர் தேங்கி, கடல் போல் காட்சியளிக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் வினாடிக்கு 177 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்தும், அணையின் பாதுகாப்பு கருதியும் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
அதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.