கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக கர்நாடக எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐவர் பானி, ஐந்து அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. இதனால் பரிசில் இயக்கவும் அருவிகளில் குளிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்படுகிறது.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் உள்ள நீர் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் உபரி நீர் போக்கியாக 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 47 ஆயிரம் தண்ணீரும் திறக்கப்பட்டு வருகின்றது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் மேட்டூர் வெள்ள கட்டுப்பாட்டு அரை நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சேலம் மேட்டூரில் அமைந்திருக்கின்ற ஸ்டான்லி அணையானது தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இருக்கும் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் பாசன வசதியை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் போதெல்லாம் காவிரி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.