வங்கியின் கஸ்டமர் கேர் சர்வீஸ் பணியாளர்கள் போல் பேசி பணத்தை பறித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தனது வங்கி கிரெடிட் கார்டை உபயோகிக்க முடியாத காரணத்தினால், ட்விட்டர் பதிவின் மூலமாக வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அன்றைய தினமே தோல்வி எண்ணிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வங்கியின் கிரெடிட் கார்ட் சேவை பிரிவில் இருந்து வாடிக்கையாளர் சேவை பணியாளர் பேசுவதாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அந்த நபர் அவர் கூறிய வழிமுறைகள் அனைத்தையும் செய்துள்ளார். பின்னர் கிரெடிட் கார்டில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் பறிபோனது.
இது குறித்து காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீஸார் வங்கியிலிருந்து வழங்கப்பட்ட விவரம் மற்றும் தொலைத் தொடர்பு விவரங்களை கொண்டு மொத்த குற்றவாளிகளையும் கூண்டோடு பிடித்துள்ளனர். குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவான தகவல்களை திருடி அவர்களைப் பயன்படுத்தி இத்தகைய அழைப்புகளை மேற்கொள்வோம் என்றும், பின்னர் அவரிடம் வங்கி பணியாளர்களை போன்றே பேசி கிரெடிட் கார்டு விவரங்களை சேகரித்து அதன் மூலம் பணத்தை எடுத்துக்கொள்வோம். பிறகு அவரிடமிருந்து பரித்த பணத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.