தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு தனிமை குறித்து புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அறிகுறி அல்லாத அல்லது குறைந்த பாதிப்புடன் வீடுகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அது என்னவென்றால், கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
சுயவைத்தியம் பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 நாட்களுக்குப் பிறகு தனிமை முடிந்து வெளியேறலாம.
மூச்சுவிடுவதில் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.