தமிழ்நாட்டில் மின் கட்டணம் 20 சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்த நிலையில் தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதேபோல் தமிழக அரசு நிதி நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு அதிமுக அரசு கஜானாவை முடிவு செய்ததோடு கடன் சுமையால் தள்ளாட வைத்து விட்டது என விமர்சனங்கள் எழுந்தது. அதே நேரத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. இதனால் நிதி நிலைமையை சரிப்படுத்த உடனடியாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போது கொரோனா பெருந்தொற்று மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை முடிந்து உள்ளதால் அரசு நிதி நிலைமை சரி செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். தமிழ்நாடு மின்வாரியம் 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.
தற்போது உள்ள மின்சார கட்டணம் 2014 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு 30 சதவீத மின் கட்டணம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக மக்களவைத் தேர்தல் அதனோடு சேர்ந்து நடைபெற்ற மினி சட்டமன்ற தேர்தல் போன்றவை காரணமாக மின் கட்டண உயர்வு முடிவை கைவிட்டது. அதன்பின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவில் உள்ளதாக கோட்டை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்க இருக்கிற நிலையில் தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தோடு சில அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என கூறுகிறார்கள்.