தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாவதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும்48” என்ற திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 80 ஆயிரமாவது பயனாளியை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: “அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் 2021 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 669 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முதல் 48 மணி நேரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்ட அவர்களின் உயர் காப்பாற்றப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மீண்டும் கட்டுப்பாடு போட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பரிசோதனை எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தாலும், மருத்துவமனையில் 40 சதவீதத்துக்கு மேல் அனுமதி இருந்தாலோ கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் அந்த சூழல் ஏற்படவில்லை என்றும், தொற்று கட்டுக்குள் வராவிட்டால் கட்டாயம் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட வேண்டியிருக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.