தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரையிலும் 97% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 %பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். கடந்த மாதம் 18ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 24-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சென்னையிலுள்ள 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் இயங்கி வருகிறது. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம்கள் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசினார்.
அதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் 2 வருடங்களுக்கு பின் நேற்று முன்தினம் கொரோனா பூஜ்ஜிய மரணம் பதிவாகியுள்ளது. அத்துடன் தற்போது 1,461 பேர் கொரோனாவால் பாதிப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனை மனதில் வைத்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் வருகிற காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் கூட பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போடுவதன் மூலமாக நிலையான எதிர்ப்பாற்றலை பெறமுடியும். இந்நிலையில் பொதுஇடங்களுக்கு செல்லும்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கிறார். அதன்படி மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்றவாறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார மையங்கள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.