தமிழகத்தில், இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையுள்ள தடுப்பூசிகள் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் அவர்களில் 10 லட்சம் பேர் 2-ம் தவணை செலுத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். இன்று (3-ந் தேதி) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.