தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போல இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெரும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். குடும்ப நிகழ்ச்சிகள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் கட்சித் தொண்டர்கள் மாஸ்க் அணிவது உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பு. கட்டாயம் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா உறுதியானால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சென்னையில் கடந்த ஆண்டு பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் தற்போது குறைவாக உள்ளது என தெரிவித்தார்.