நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு உள்ளது. இந்த கடலை மிட்டாய்க்கு இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது அனைத்து அஞ்சலகங்களில் கடலைமிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 செலுத்தி கடலைமிட்டாய் கோரி பதிவு செய்தால் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையதளம் மூலமாக தகவல் பெறப்பட்டு ஓரிரு நாட்களில் வாடிக்கையாளரின் வீடு தேடி அஞ்சல் மூலமாக கடலை மிட்டாய் வந்து சேரும்.
இதற்கு தனிக் கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு பண்டல் இல் தலா 200 கிராம் எடை கொண்ட 5 கடலைமிட்டாய் (ஒரு கிலோ) பாக்கெட்டுகள் இருக்கும். நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே தபால்காரர் மூலமாக மேற்கூறிய தொகையை செலுத்தி கடலை மிட்டாயை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்பீடு போஸ்ட் முறை பயன்படுத்தப்படுகிறது.