தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கோவிட் -19 பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்து நம்மையும் நம் சுற்றத்தாரையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது நம் தலையாய கடமை. நமது அரசியல் என்பதே நமது மக்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்காக தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். நம்முடைய பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு! என்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.