அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்படி தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் பயண அனுபவங்களையும், பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். மேலும் முதல்வர் பகிர்ந்த சில நெகிழ்ச்சியான தருணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். என் உயிருடன் கலந்துள்ள தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று தான் அந்த கடிதத்தை அவர் ஆரம்பித்திருக்கிறார். உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் ஓதை தண்பதங்கொள் சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி என்ற சிலப்பதிகார வரிகளுக்குச் சிறப்பான உரை எழுதிடும் வண்ணம் கரைபுரளும் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஓய்வில்லாத 2 நாள் ஆய்வு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தபிறகு, தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அரசின் அறிவிப்புகள் வெற்றுக்காகிதங்களாகவோ வெறும் காற்றில் கலந்து, கரைந்து போவதாகவோ இருந்து விடாமல், அவை முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா, ஒவ்வொரு அறிவிப்புக்குமான செயல்பாடு எந்நிலையில் இருக்கிறது என்பது குறித்து அந்த ஆய்வு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். பயணவழியில் முதலாவதாக தஞ்சாவூரில் வரவேற்பளித்தனர். இந்நிலையில் வா.வீரசேகரன் என்ற கழகத் தோழர் தன்னிடம் காகிதம் ஒன்றை கொடுத்தார். அது என்னவென்று பார்க்கையில் தான் வெறும் காகிதம் அல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது. அதாவது, திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நம் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் அவர்கள் தனக்கிருந்த பங்குகளை தன் வயதுமூப்பின் காரணமாக நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்னதாக கடந்த 1946-ல் கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும், தலைவர் அவர்களின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது. அதன்பின் தஞ்சை பாபநாசம் பகுதியில் பீமனோடை வடிகாலைத் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டபோது, அங்கிருந்த மக்கள் “இவ்வளவு கடுமையா அலையுறீங்களே, உடம்பைப் பார்த்துக்கோங்கள்” என கூறியதை பெருமையாக பதிவு செய்திருக்கிறார். இதற்கிடையில் பேரளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது பல வகையான பால்ய கால நினைவுகளுக்குள் சென்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் பயணத்தில் பேரளம் ரயில்வே கிராஸிங்கைக் கடக்கும் போது என்னுடைய சிறுவயது நினைவுகளானது வட்டமிட்டது.
அத்துடன் பள்ளிக்கூட நாட்களில் அம்மாவின் ஊருக்கு வரும்போது, பூந்தோட்டம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித் தான் மாட்டுவண்டியில் செல்வோம். எனது தாய்பிறந்த மண்ணிற்கு வரும் சமயத்தில் என் தாயார் தயாளுஅம்மாள் மனதில் எழும் மகிழ்ச்சியும் உறவினர்கள் காட்டக்கூடிய அன்பும் நெஞ்சைவிட்டு அகலாதவை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது மாமா தெட்சிணா மூர்த்தி அவர்கள் 99 வயதிலும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றார். நான் திடுக்கிட்டு நீங்க ஏன் இந்த வயதில் சிரமப்படுறீங்க..? நானே வீட்டுக்கு வந்திருப்பேன் என்று கூறினேன். கழகப்பற்று மிகக் கொண்டவரான மாமா, “உன்னைப் பார்த்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்றுதான் வந்தேன். மிக நன்றாக நிர்வாகம் செய்திட்டு இருக்க நீ” என்றபோது நெகிழ்ந்து விட்டேன். கருணாநிதி பிறந்த ஊருக்கு ஆய்வு சென்றபோது, திருவாரூரை நெருங்கநெருங்க வரவேற்பும் அதிகமானது.
தமிழ் காக்கத் தளராது போராடிய நம் தலைவர் முதல் முதலில் தமிழ்க்கொடி ஏந்திப் போராடிய மண் அல்லவா என சொந்த ஊர்ப்பற்றை தேர்ந்த சொற்களால் பதிவுசெய்த முதல்வர் இறுதியாக அக்கடிதத்தை நெகிழ்வோடு முடிக்கிறார். அந்தக் கடிதத்தின் கடைசிப் பத்தியில “தமிழக முதல்வராக யாதும் ஊரே என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது. அதிலும் திருவாரூர் என்றபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய் சிலிர்ப்பது வழக்கமாகவுள்ளது. அது நமது ஆருயிர்த்தலைவர் போல எனவும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தையும் தருகிறது. இதில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என பாடிய புலவரே கணியன் பூங்குன்றன் என்று தன் பெயருடன், தன் ஊரான பூங்குன்றத்தைச் சேர்த்துக் கொண்டார் என்று கூறுவார் முத்தமிழறிஞர் கலைஞர். காவிரியும் அதன்கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் போகும்போது அது போன்ற உணர்வுதான் எனக்கும். என்னவாக இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரன் ஆயிற்றே என குறிப்பிட்டுள்ளார்.