சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா புறநோயாளிகள் பிரிவு, மருத்துவமனை கட்டமைப்பு ஆகிய வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 70 சதவீதத்தினர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். ஆகவே தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உயிரிழப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். தற்போது வரையிலும் 9.72 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடி, 10 லட்சத்து, 21 ஆயிரத்து 196 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர். கூடிய விரைவில் 10 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைந்து விடுவோம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் “ஜீரோ சர்வே” என்ற ரத்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் 2020 நவம்பர் மாதம் வெளியான ஆய்வில் 32 சதவீதம் பேருக்கும், 2021 ஏப்ரல் மாதம் வெளியான ஆய்வில் 29 சதவீதம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது. அதன்பின் 4-ம் கட்ட ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆய்வில் 1,706 பேர் அடங்கிய 30 குழுவினர் 32 ஆயிரத்து 245 கிராம மற்றும் நகர்ப்புற மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து, சுகாதாரத் துறை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்நிலையில் ஆய்வு இறுதியில் 10 வயதிற்கு மேற்பட்ட 87% நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டு இருக்கிறது.
அதேபோன்று தடுப்பூசி போட்டவர்களுக்கு 90 சதவீதமாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 69 சதவீதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதனிடையில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவீதம், தென்காசியில் 92 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. மதுரை, பெரம்பலுார், சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் 91% நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது இருக்கிறது. அதே போன்று கடலுார், நாகை மாவட்டங்களில் 90 % பேருக்கும், திருநெல்வேலி, நாமக்கல், சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 88 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. பிற மாவட்டங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து இருக்கிறது என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் ”தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றில் 3 சதவீதம் டெல்டா வகையும், 97 சதவீதம் ஒமைக்ரான் வகையும் பரவி வருகின்றன” என்று கூறினார்.