கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக உள்ள நகைகளை பொங்கலுக்கு திரும்ப வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது.
இதனால் கூட்டுறவு சங்க நகைகடன்களை ஆய்வு செய்யுமாறும், அந்த பணியை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்கும்படி கூட்டுறவு துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவகாசம் முடிந்து ஆய்வு முடிவடையவில்லை. தங்க நகைகளை திரும்ப வழங்கக்கோரி கூட்டுறவு வங்கிகளுக்கு நகைகளை அடமானம் வைத்தவர்கள் சென்றபடி உள்ளனர். இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் நகைக்கடன் ஆய்வு முடிக்க அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கு அடமானமாக வைத்த நகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.