தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் பிறகு பொங்கல் பரிசுக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகளில் ரூபாய் 1000 ரொக்க பணத்தை கொடுப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நியாய விலை கடைகளில் விற்பனை இயந்திரத்தின் மூலம் கைரேகை சரிபார்ப்புக்கு பிறகு ரூபாய் 1000 ரொக்க பணத்தை வழங்க வேண்டும். வரிசையில் காத்திருக்கும் பொது மக்களை திரும்ப அனுப்பாமல் காத்திருக்கும் அனைவருக்கும் ரொக்க பணத்தை வழங்குவதோடு, அன்றாடம் விநியோகம் செய்யும் பொருட்களையும் எவ்வித தடையும் இன்றி வழங்க வேண்டும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் குறித்து பொதுமக்கள் யாரேனும் புகார் அளிக்க வேண்டுமானால் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1800 425 5901 போன்றவற்றுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.