தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று தடுப்பூசி முகாம்கள் எதுவும் செயல்படாது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் சுமார் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.