குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நியாய விலை கடைகளில் பொருட்களை பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளில் செயல்பாடுகள், தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் குறைபாடுகள் குறித்த புகார்கள் எதுவாக இருந்தாலும் மக்கள் இந்த குறை தீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.