எல்லாருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலானோருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். தற்போதைய கொரோனா போன்ற நெருக்கடியான சமயத்தில் நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லையே என்ற கவலை பலருக்கு உருவாகியிருக்கும். இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகையைக் கொடுத்து வீடு வாங்குவது சிரமமான ஒன்றுதான். ஆனால், குறைந்த விலைக்கு வீடு வாங்க தற்போது வாய்ப்பு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக சிறப்பு வீட்டு ஏல விற்பனைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாட்டு இடங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஏலமானது SARFAESI சட்டத்தின் கீழ் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகிறது.IBAPI போர்ட்டலில் இந்தவீடு விற்பனை நடத்தப்படுகிறது.
இந்த ஏலத்தில் மொத்தம் 12,887 வீடுகளும், 2826 வணிக பயன்பாட்டு இடங்களும், 1407 தொழில் துறை இடங்களும், 101 வேளாண் இடங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த 30 நாட்களுக்குள் 895 வீடுகளும், 323 வணிக பயன்பாட்டு இடங்களும், 167 தொழில் துறை இடங்களும் விற்பனை செய்யப்படவுள்ளன. https://ibapi.in/ என்ற வெப்சைட்டில்தான் இந்த ஏலம் நடைபெறுகிறது.