தமிழகத்தில் இன்று அதீத கனமழை பெய்யும் என்பதால் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதனால் தமிழக அரசு இன்று 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும் அதிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.