தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு பழுது நீக்கும் பணிகளானது நடைபெற உள்ளதால்,போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். இதன் காரணமாக வேலூரில் இருந்து சித்தூர் மற்றும் திருப்பதி உள்ளிட்ட ஆந்திரா மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்களை மாற்று வழியில் செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே வேலூரிலிருந்து சித்தூர் செல்லும் பேருந்துகள் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சேர்காடு வழியாகவும், தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்காடு வழியாக சித்தூர் செல்ல வேண்டும். மேலும் சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி வழியாக வரும் சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர், திருப்பதி செல்ல வேண்டும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து முடிக்க படும் எனவும், மேலும் தற்போதைய நடைமுறைக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.