கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்துகள், விமானங்கள் மற்றும் ரயில் சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் ஜூலை வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பபெற மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பயணிகள் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் ரயில்வே அளிக்கப்பட்ட அசல் டிக்கெட்டையும் அளிக்க வேண்டும். இதையடுத்து டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமும் இல்லாமல் முழுமையாக திரும்ப அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் விண்ணப்பித்து தங்கள் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.