நிவர் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மக்களை சந்தித்து பேசியதன் மூலம் அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை தவிக்கவிட்டதை காண முடிந்ததாகக் கூறியுள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார். கலைஞர் கருணாநிதி நகர் அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் மழைநீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் குறைவு தான் என கூறும் முதலமைச்சர் சேதத்தின் விவரங்களை தெரிவிக்கவில்லை என்று ஸ்டாலின் குறை கூறினார்.
எனவே ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது மட்டுமே நிவர் சாதனை என்று முதலமைச்சரும் அமைச்சர்களும் கருதக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். சேதங்களை கணக்கெடுகிறோம் என்று காலம் கடத்தாமல் உடனடியாக சேதமடைந்த விலைபொட்ருட்கள் வீடுகளுக்கு இழப்பீட்டு தொகை மற்றும் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிதியை அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.