எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முந்தைய அம்மா அரசு தனி கவனம் செலுத்தி சென்ன, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மிகப்பெரிய சாலை மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 2017 க்கு பிறகு சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மிகப்பெரிய உயர்மட்ட பாலம் ஒப்புதல் தரப்பட்டது.
இதையடுத்து தற்போது பாலப் பணிகள் 99.99 சதவீதம் முடிவடைந்த நிலையில் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வராத காரணத்தினால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வருகின்றனர். கடந்த அம்மா அரசில் தமிழகம் முழுவதுமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவரப்பட்டன என்பதை தற்போதைய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பாலங்கள் கட்டுவது என்பது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தான். எனவே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கட்டப்பட்டு வரும் கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.