ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவ-மாணவிகள் மனுவை கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட புறநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா தலைமையிலான காட்டுநாயக்கன் சமூதாயத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.
அவர்கள் மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா நகர், முள்ளக்காடு, முத்தையாபுரம், தாளமுத்து நகர், புதுக்கோட்டை, ஏரல், சாயர்புரம், கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, புதியம்புத்தூர், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பழங்குடியினத்தைசேர்ந்த காட்டுநாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருக்கிறது.