முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவர்கள் வலைகளை உலர்த்த நிழல் கூடம் அமைத்துத் தருமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பரனார் மாவட்ட மீனவர் மற்றும் சங்குகுளி தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அருகே இருக்கும் முள்ளக்காடு கோவளம் மீனவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றோம். எங்கள் வாழ்வாதாரம் சுனாமியின் போது மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. நாங்கள் கடலுக்கு சென்று விட்டு மீண்டும் கரைக்கு வரும்போது கரையோரத்தில் இருந்த சிறிய முட்ச்செடிகள் நிழலில் அமர்ந்து வலைகளை உலர்த்தி வந்தோம். ஆனால் பூங்கா அமைப்பதற்காக தற்பொழுது மூட்செடிகளை அகற்றி வருகின்றார்கள். இதனால் மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் வலைகளை சரி செய்வதற்கும் பொதுவான நிழல் கூடம் அமைத்து தர வேண்டும் எனவும் கடல் அரிப்பு ஏற்படாதவாறு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும் மனவில் கூறி உள்ளனர்.