நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மஹாராஷ்டிரம் ,ஹரியானா மாநிலங்களின் சட்டசபை மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் இடைத்தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறது. அதன் முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி மற்றும் திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்றியது.
திமுக கூட்டணி சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. அதே போல விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடைந்தது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , தமிழகத்தில் நடந்த விக்ரவாண்டி நாங்குநேரி ஆகியிருந்தது இடைத்தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திட்டமிட்டு கிளப்பிய ஜாதி உணர்வு ஆகியவற்றை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கூற்று. அதன் அடிப்படையில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும் , தோல்வியால் துவண்டு விடுவதும் அல்ல. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் அத்தனையும் ஒன்றாக கருதும் பக்குவம் பெற்றவர்கள் நாம். வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் வாக்களிக்க தவறியவர்கள் நம்பிக்கையை பெற மேலும் தொடர்ந்து உழைப்போம்.
இந்த இரண்டு இடைத்தேர்தலிலும் இரவு பகல் உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் , கழக நிர்வாகிகள் , கழக உடன்பிறப்புகள் , கூட்டணி கட்சி தலைவர்கள் , தோழர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் என்ற அடிப்படையில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது உழைப்பு வீண்போகவில்லை , வீண்போகாது. அடுத்த தேர்தல் களத்துக்கு சேர்த்து நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.