சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தில் எம்.எல்.ஏ அசோக்குமார் பேசியபோது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை எனவும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதாக அறிவித்தும் அதை பட்ஜெட்டில் சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளதாவது “மக்கள் நலப் பணியாளர்களை முதன் முதலாக கொண்டுவந்தது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். உங்கள் ஆட்சியில் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள். பின்னர் அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தங்கள் பணியை கேட்டனர். அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதனை அதிமுக அரசு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மேற்கொண்டு தடையாணை பெற்றுள்ளது. அந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகு நிச்சயமாக வேலை வாய்ப்பை வழங்குவோம்” இவ்வாறு அவர் கூறினார்.