தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் திமுக வெற்றிக்காக உடலைச் சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக வெற்றி பெற்றதற்கு காணிக்கையாக ஒரு பெண் நேற்று நாக்கை அறுத்துக் கொண்டார். இந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அந்த சகோதரி விரைவில் நலம் பெற வேண்டும். மக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது. எளிய மக்களுக்கு நற்பணி ஆற்ற உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.